தமிழ் சினிமா

விஜய் அளித்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் சிபிராஜ்

ஸ்கிரீனன்

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, நடிகர் விஜய் போன் செய்து வாழ்த்தியது மறக்க முடியாத நெகிழவைக்கும் விஷயம் என்கிறார் நடிகர் சிபிராஜ்.

சிபிராஜ், அருந்ததி உள்ளிட்ட பலர் நடிக்க, ஷக்தி செளந்தராஜன் இயக்கி இருக்கும் படம் 'நாய்கள் ஜாக்கிரதை'. சத்யராஜ் தயாரித்து வரும் இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்து இருக்கிறார். சிபிராஜ் உடன் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நாய் ஒன்று நடித்திருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியிடப்பட்டது. திரையுலகினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்கள். ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிராஜ் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடிகர் சிபிராஜை தொடர்பு கொண்டபோது, "'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் ட்ரெய்லரை எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தேன். ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.

உங்களுக்கு மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றுக் கொடுக்கும் என்று அவர் கூறினார். விஜய் அண்ணா வாழ்த்தியது எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக கருதுகிறேன்" என்று கூறினார்.

'நாணயம்' படத்திற்கு பிறகு, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று காத்திருந்து 'நாய்கள் ஜாக்கிரதை' கதையை தேர்வு செய்து சிபிராஜ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT