தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதற்கு கவலை தெரிவித்தும் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜீ.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், "கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படைத் தேவை. அத்தகைய கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன.
கல்வி என்பது வியாபாரமாக இருக்கும் சூழ்நிலையில் இதனைத் தடுக்க நாம் இப்போது முயற்சி எடுக்கவில்லை என்றால், இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி சாத்தியம் இல்லாமல் போகிவிடும்.
உலக அளவில் சாதித்த பெரும்பான்மையானவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். சமீபத்திய தகவலின்படி 890 அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் மூடும் தருவாயில் உள்ளன. அதற்கு முக்கியக் காரணம் அங்கு 50க்கும் குறைவான மாணவர்கள்தான் இருக்கிறார்கள். நகரங்களில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.
இதில் என்னால் முடிந்த சிறிய முயற்சியாக, சென்னையில் இருக்கிற தொடக்கப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி பயிற்றுவிக்கிற ஒரு தனியார் ஆசிரியரின் மாத சம்பளத்தை ஏற்றுள்ளேன்.
இதில் எனக்கு ஆலோசனை வழங்கிய தோழி லாவண்யா அழகேசன் மற்றும் குணசேகரனுக்கு என்னுடைய நன்றிகள். மேலும் எனது ரசிகர்கள், நண்பர்கள் முக்கியமாக அயல்நாட்டில் வசிக்கும் தமிழ் சொந்தங்களிடம் ஒரு வேண்டுகோள்.
கிராமத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொடக்கப் பள்ளிக்கு உங்களால் முடிந்த இதே மாதிரியான முயற்சியை நீங்கள் முன்னெடுக்க வேண்டுகிறேன். இந்த முயற்சியை என்னுடைய தரப்பிலிருந்தும் உங்களுடைய தரப்பிலிருந்தும் ஒரு சிறிய துளியாக துவங்கலாமே! கண்டிப்பாக நாம் நிச்சயம் இலக்கை அடைவோம்.
இதுதான் உங்கள் அனைவரிடமும் என்னுடைய வேண்டுகோள். இதனை அனைவரும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.