ஒரு பெரு நகரத்தை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கிறார் தாதா பிரகாஷ்ராஜ். அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது யார் என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்பே, தாதாவின் மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு 3 பேரும் தந்தையின் இடத்துக்கு வரத் துடிக்கின்றனர். பிரகாஷ்ராஜின் சிம்மாசனத்தைப் பிடிக்க 3 பிள்ளை களுக்குள் நடக்கும் போட்டியும், குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் வஞ்சமும், இழப்புகளும்தான் கதை. வன்முறையானது, நாய்களைப் போலத் துரத்தி நாய்களைப் போல சாக வைக்கும் என்ற செய்தியை ரத்தம் தெறிக்க சொல்கிறது ‘செக்கச் சிவந்த வானம்’. ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்களோடு களமிறங்கியதால், இப்படத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
முரட்டுத்தனத்தின் மொத்த உருவமாக அரவிந்த்சாமி, மூளைக்கார பிள்ளையாக அருண் விஜய், தன் காரியக் குட்டியாய் சிம்பு, அரவிந்த்சாமிக்கு உதவும் ஆபத்பாந்தவனாக விஜய்சேதுபதி என 4 பேருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காமல் தங்களுக்கான தடத்தில் வெளுத்து வாங்குகின்றனர். விஜய் சேதுபதி, சிம்பு வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது. துயரநிழலும் நக்கலுமாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி, கடைசியில் நாயகனாகிறார்.
எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதோடு இரண்டறக் கலப்பது எல்லோராலும் முடியாது. அந்த வார்ப்பில் வார்த்தெடுத்த வைரமாக ஜொலிக்கிறார் பிரகாஷ்ராஜ். உடன் மனைவியாக வரும் ஜெயசுதாவும் நிறைவாக நிற்கிறார்.
ஜோதிகா, அதிதி ராவ், டயானா எரப்பா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 4 நாயகிகள் இருந்தாலும், மற்ற 3 பேரையும் பின்தள்ளி முன்நிற்கும்படியான பாத்திரப் படைப்பு ஜோதிகாவுக்கு. நிறைவாக செய்திருக்கிறார். கதையோட்டத்தின் கடைசிவரை பயணிக்கிறார்.
பிரகாஷ்ராஜ் எப்படி தாதா ஆனார்? என்ன பின்புலம் என்பதெல்லாம் படம் தொடங்கி சில நொடிகளில் சொல்லப்பட்டு, நேரடியாக அடுத்தடுத்த நகர்வுக்கு வருகின்றனர். தொடக்கத்தில் பிடிக்கும் கதையின் வேகம் இறுதிவரை அதன் போக்கிலேயே செல்கிறது. கதை இப்படித்தான் போகிறது என்பது பார்வையாளர் ஊகிக்கக்கூடியதாக இருந்தாலும், அதையும் கடைசிவரை சுவாரசியம் குறையாமல் கொண்டுசென்றது இயக்குநரின் வெற்றி.
படத்தின் மற்றொரு நாயகன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். சென்னை பெரு நகர வீதியைத் தாண்டி துபாய், செர்பியா என பரபரக்கிறது அவரது கேமரா. அவரது காட்சிக் குவியல்களை லாவகமாக நறுக்கியிருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். படத்தின் மற்றொரு பலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.
புதுச்சேரி விடுதியில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை, செர்பியாவில் போலீஸாரிடம் சிம்பு தப்பிக்கும் தொடக்கக் காட்சி, துபாயில் அருண் விஜயின் வீட்டுக்குள் 4 பேர் வந்து போதைப்பொருளை வைப்பது இப்படியான லாஜிக் இடறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், அந்த பலவீனங் களை யோசிக்கவிடாத வகையில் படம் நகர்கிறது.
அவ்வளவு பெரிய தாதாவின் எதிரியாக காட்டிய தியாகராஜன் கேரக்டரை இன்னும் வலிமையாக கட்டமைத்திருக்கலாம்.
வன்முறை சார்ந்த படங்களை எவ்வளவு சிறப்பாக படமாக்கியிருந்தாலும், பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒரு நெகட்டிவ் மனநிலை சில நிமிடங்களுக்கு நம்மைப் பற்றி படரும். ஆனால், அப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல், படம் முடிந்து வெளியேறும் பார்வையாளனுக்கு ஒரு பாஸிட்டிவ் மனநிலையை கொடுப்பதில் வெற்றி பெறுகிறது ‘செக்கச் சிவந்த வானம்'.