கதாநாயகி சாந்தினி தமிழரசன் கொலையாவதோடு தொடங்கு கிறது படம். எதிர்வீட்டுப் பையன் சிபி புவனசந்திரன் மீது போலீஸுக்கு சந்தேகம் எழுகிறது. அவனுக்கு உதவ வருகிறார் பத்திரிகையாளர் விசாகன் வணங்காமுடி. கொல்லப்பட்ட சாந்தினி யின் கணவன் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணனை போலீஸ் விசாரிக்க, அவருக்கு உதவ வருகிறார் நிழல் உலக தாதா குரு சோமசுந்தரம். இந்த கொலை வழக்கு மூலம் நிழல் உலக முக்கியப் புள்ளியை பொறி வைத்து பிடிக்க முயற்சிக்கின்றனர். சாந்தினியைக் கொன்றது யார்? இந்த கொலை எதற்காக நடந்தது? அந்த முக்கியப் புள்ளிக்கும் வஞ்சகர் உலகத்துக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக் கதை.
‘ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா. அவங்களுக்கு அழகான ஒரு குட்டிப் பொண்ணு..’ என்று அழகாய் கையைப் பிடித்துக்கொண்டு கதை சொல்வது ஒரு பாணி. ஒரு கதையை கூறு கூறாக்கி, முன்னும் பின்னுமாக மாற்றி சஸ்பென்ஸ் ஏற்றிக் கூறுவது இன் னொரு பாணி. 2-வது வகையை தேர்வு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ் பீதா. இதுபோன்ற சோதனை முயற்சி சில சமயம் பரவசம் தரும்.. ‘குடைக்குள் மழை’, ‘விருமாண்டி’, ‘காக்க காக்க’ போல. அல்லது, ஒரே யடியாக பாடாய்ப் படுத்திவிடும். அந்த இரண்டுக்கும் நடுவே இடைநிலை காவியமாய் நிற்கிறது ‘வஞ்சகர் உலகம்’.
போதைப் பொருள் கும்பல், போலீஸ், புலனாய்வுப் பத்திரிகை யாளர் என வழக்கமான கிரைம் திரில்லர் படங்களுக்கான கதைக் களத்தை எடுத் துக்கொண்டு, சொன்ன விதத்திலும் இயக்குநர் ஓரளவு முத்திரை பதித்திருக் கிறார். கதை, வசனம் விநாயக். இவரே திரைக்கதையிலும் இயக்குநருக்கு பக்கத் துணையாக இருந்திருக்கிறார்.
படத்தின் அசுர பலம் குரு சோம சுந்தரத்தின் உடல்மொழி. சற்று விசித் திர குணங்கள் கொண்ட இந்த கதா பாத்திரத்தை, பலர் அதிகமாக குர லெழுப்பி, தேவையில்லாத உடல் மொழிகள், முகபாவங்கள் கொடுத்து வீணடித்திருப்பார்கள். ஆனால் குரு சோமசுந்தரம் கொஞ்சம்கூட ஓவர் ஆக்ட் செய்யாமல் அடக்கி வாசித்து அப்ளாஸ் வாங்குகிறார்.
அறிமுக நாயகன் சிபி புவனசந் திரனும் நன்றாகவே ஸ்கோர் செய் கிறார். துணிச்சலான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சாந்தினி தமிழரசனும் நடிப்பில் குறைவைக்கவில்லை.
இவர்களைத் தவிர அழகம்பெரு மாள், விசாகன் வணங்காமுடி, பத்திரிகையாளர் அனிஷா அம்ப் ரோஸ், காவல் ஆய்வாளர் வாசு விக்ரம், மூர்த்தி என ஏராளமான பாத் திரங்கள். அவர்களும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள். ஜான் விஜய் கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகவே படுகிறது.
போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத பணப் பரிமாற்றம், கொலை யாளியை தேடும் விசாரணை என வெவ் வேறு தளங்களில் பயணிக்கும் படம் அநியாயத்துக்கு குழப்புவதோடு, சவ்வாக நீள்கிறது. இவ்வாறு மெது வாக நகர்வது, காட்சிகளின் சுவாரஸ்ய மின்மையால் அல்ல. நிதானமாக கதை சொல்வதை ஒரு உத்தியாக பயன் படுத்துகிறார் இயக்குநர். படத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், கிளைமாக்ஸ் திருப்பத்தைக்கூட முன்கூட்டியே வச னங்கள் மூலம் சூசகமாக தெரிவிக் கிறார். இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், எதிர்பார்ப்பு, விறுவிறுப்பு மற்றும் சாதாரண திருப்பங்கள்கூட இல்லாததால் ஒரு கட்டத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது.
விசாகனின் விசாரணைக் காட்சி களில் நம்பகத்தன்மை இல்லை. என் கவுன்ட்டரில் தப்பித்து திரும்பி வந்த சோமசுந்தரத்தை காவல் துறை ஏன் விட்டுவைக்கிறது என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை. சமூகத்தால் இழிவுபடுத்தப் படும் தன்பால் உறவாளர்கள் சமூக விரோதிகள் ஆவதுபோல காட்டுவது அபத்தம்.
குறைகள் ஆங்காங்கே இருந்தா லும், முன்னுக்குப் பின் நகரும் திரைக் கதையோடு, படத்தின் தொழில்நுட்பத் தரமும் சேர்ந்து, திரையுடனேயே நம்மை ஒன்றவைத்துவிடுகின்றன.
சரவணன் ராமசாமியுடன் மெக்ஸி கோவின் ரோட்ரிகோ டெல்ரியோ இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். அது, காட்சியின் தன்மைக்கேற்ற வண்ணங்களாலும், புதுமையான கோணங்களாலும் ஈர்க்கிறது. சாம்.சி.எஸ் பின்னணி இசை வெகு சிறப்பு. குறிப்பாக, கர்னாடக இசைப் பின்னணியில் நடக்கும் என்கவுன்ட்டர் புதிய அனுபவம். நிகழ்வுகளை வெட்டி வெட்டிச் சொல்லும் திரைக்கதையை சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் ஆன்டனி.
முன்னும் பின்னுமாக நகரும் கதை, அதில் ஏராளமான பாத்திரங்கள் என ஓரளவு புரிந்துகொண்டு, கதைக்குள் லயிப்பதற்குள் முதல் முக்கால் மணி நேரம் சென்று விடுகிறது. கதை ஓரளவு பிடிபடத் தொடங்கியதும், ‘அடுத்து என்ன?’ என்ற தேடுதலும் ஏற்படுகிறது. 2 மணி நேரம் தாண்டியும் ரசிகன் பொறுமை காப்பதே அந்த மையப் புள்ளியில் சொல்லவரும் வலுவான காரணத்தை தேடவே. ஆனால், அந்த இடத்தில் பெரிதாக சறுக்கியதில், நம்மிடம் இருந்து வெகுவாக விலகி, அந்நியப்பட்டு நிற்கிறது ‘வஞ்சகர் உலகம்’. தொழில்நுட்பத்துக்காகவும், மாறுபட்ட முயற்சிக்காகவும் வரவேற் கலாம்.இந்து டாக்கீஸ் கருத்து