தமிழ் சினிமா

லட்சுமி பாம் படக்குழுவினருடன் சமரசம்: மீண்டும் இயக்குநரானார் லாரன்ஸ்

ஸ்கிரீனன்

'லட்சுமி பாம்' படக்குழுவினருடன் சமரசம் ஏற்பட்டுவிட்டு இருப்பதால், மீண்டும் இயக்குநராகியுள்ளார் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’, வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தில், அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வந்தார். சில தினங்களுக்கு முன்பு 'லட்சுமி பாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அன்றைய தினமே ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தான் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஏனென்றால் தனக்கான உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்றும், ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டதே தெரியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

சில நாட்கள் கழித்து, 'லட்சுமி பாம்' படக்குழுவினர் தன்னை சந்திக்க வருவதாகம், என்னுடைய சுயமரியாதைக்குப் பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால், இதுகுறித்து யோசிப்பேன். சந்திப்புக்குப் பிறகு பார்க்கலாம் என்று லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை வந்த 'லட்சுமி பாம்' படக்குழுவினர் லாரன்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. தன்னைத் தேடி வந்து பேசியதாலும், பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் 'லட்சுமி பாம்' படத்தை இயக்க லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் 'லட்சுமி பாம்' படத்தைச் சுற்றி நிலவி வந்த சர்ச்சைகள் அனைத்துக்குமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT