தமிழ் சினிமா

‘த லயன் கிங்’ படத்துக்குத் தமிழ் வசனம் எழுதிய மதன் கார்க்கி

செய்திப்பிரிவு

‘த லயன் கிங்’ ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.

1994-ம் வருடம் வெளியான ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ‘த லயன் கிங்’, தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான ‘த ஜங்கிள் புக்’ போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ‘த லயன் கிங்’ படம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. அதில், தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

‘பத்மாவதி’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பாகுபலி’ என ஏற்கெனவே வேற்றுமொழிப் படங்களுக்குத் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. அத்துடன், ‘2.0’, ‘எந்திரன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ எனப் பல தமிழ்த் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி - மார்வல் தயாரிப்பான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஹாலிவுட் படத்தை இந்திய மொழிகளில் டப்பிங் செய்தபோது, இங்கு பிரபலமான நட்சத்திரங்களை வைத்து டப்பிங் செய்தனர். படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்து, வசூல் சாதனை படைத்தது.

தற்போது ‘த லயன் கிங்’ படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனில், முஃபாசா கதாபாத்திரத்துக்கு ஷாரூக் கானும், சிம்பா கதாபாத்திரத்துக்கு ஷாரூக்கின் மகன் ஆர்யனும் டப்பிங் பேசியுள்ளனர். வருகிற ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.

SCROLL FOR NEXT