தமிழ் சினிமா

‘பிகில்’ அப்டேட்: அப்பா விஜய்யின் பெயர் ராயப்பன்?

செய்திப்பிரிவு

‘பிகில்’ படத்தில் அப்பா விஜய்யின் பெயர் ராயப்பன் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிவரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நேற்று (ஜூன் 21) வெளியானது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய்யின் 63-வது படமான இதில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய். கால்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக வரும் மகன் விஜய்யின் பெயர், மைக்கேல். அவருடைய செல்லப்பெயரான ‘பிகில்’ என்பதுதான் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பா விஜய் கதாபாத்திரத்துக்கு ராயப்பன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கால்பந்து போன்றவற்றை வைத்து, இந்தப் படம் வடசென்னையை மையப்படுத்தியதாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

வருகிற தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT