நான் தாழ்ந்து போகமாட்டேன் என நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அயோக்யா’. வெங்கட் மோகன் இயக்கிய இந்தப் படம், கடந்த மே 10-ம் தேதி ரிலீஸானது. ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது.
இந்நிலையில், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு இன்று (மே 8) பிறந்த நாள். எனவே, தந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஷால்.
மேலும், “எனது தந்தை. எனது ஊக்கம். உங்களைச் சந்தித்து, நேர்மையாகவும், நல்லது செய்யவும், நான் தொடங்கிய விஷயத்தை முடிக்கவும் தேவையான அனைத்து வலிமையையும் ஊக்கத்தையும் பெற்றேன். நடிகர் சங்கக் கட்டிடம் நேர்மையாகவும் அக்கறையுடனும் கட்டப்பட்டு வருகிறது. நான் தாழ்ந்து போகமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் விஷால்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.