தமிழ் சினிமா

இதிலாவது ஓட்டுப்பெட்டி காணாமல் போகாது என நம்புவோம்: நடிகர் மன்சூரலிகான்

செய்திப்பிரிவு

நடிகர் சங்கத் தேர்தலிலாவது ஓட்டுப்பெட்டி காணாமல் போகாது என நம்புவோம் என மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், ஓட்டு போட்டபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மன்சூரலிகான், “தேர்தல் நன்றாக நடைபெறுகிறது. தபால் ஓட்டுகளைப் பொறுத்தவரையில், கொஞ்சம் முன்னாடியே அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என திடீரென அறிவித்துவிட்டனர். தபால் ஓட்டுகள் வந்துசேர இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் அளித்திருக்கலாம்.

யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. மூத்தவரான பாக்யராஜ், நல்ல கலைஞர். உலக அளவில் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நிர்வாகி. ஐசரி வேலனின் மகனான ஐசரி கணேஷும் நல்ல பண்பாளர். புதியவர்களையும் பதவியில் அமரவைத்து, விஷால் அணியும் பதவியில் இருந்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

போட்டி இருந்தாலும், இன்று மாலையே 5 மணிக்கு மேல் இவர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடும். ஓட்டு பெட்டிகளை இரண்டு மாதங்களுக்கு எங்கேயோ கொண்டுபோய் வைத்துவிடுவார்களாமே... மோடி சொல்லிக் கொடுத்திருக்கார். உலகத்திலேயே டிஜிட்டல் இந்தியாவில் இரண்டு மாதம் கழித்துத்தான் தீர்ப்பு சொல்லப்படும். இதிலாவது ஓட்டு பெட்டிகள் காணாமல் போகாது என நம்புவோம்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.

SCROLL FOR NEXT