‘தளபதி 63’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் பாடியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன், சின்ன வயதில் சங்கீதம் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை சோனி மியூஸிக் நிறுவனம் நேற்று (ஜூன் 18) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தந்தை ரஹ்மானிடம் வீடியோ கான்பரன்ஸிங்கில் பாடிக் காண்பிக்கிறார் அமீன்.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம், ‘காத்திருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளது. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் ‘தளபதி 63’ படத்துக்கு இசையமைத்து வருகிறார். அதன் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே, ‘தளபதி 63’ படத்தில் அமீன் பாடியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ‘மவுல வஸ்ஸல்லி வ சல்லிம்’ என்ற பாடலைப் பாடியுள்ளார் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். அதில், மகன் கதாபாத்திரத்துக்கு ‘பிகில்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.