2019-2022ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியது.
2015 - 2018 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
ஆனால், நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தைக் கூட்டி தேர்தல் நடத்துவது என்றும், அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்தும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார் நாசர்.
ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, கடும் சர்ச்சைகள் நிலவி வந்தது. பாண்டவர் அணிக்கு எதிராக சங்கரதாஸ் சுவாமிகள் அணி களமிறங்கியது. இரண்டு அணிகளுமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாகக் கூறி, தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு ஜூன் 21-ம் தேதி தடை விதித்த சென்னை உயர் நீ்திமன்றம், திட்டமிட்டபடி 23-ம் தேதி (இன்று) தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி நடிகர் விஷால் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர்களது தரப்பின் கோரிக்கையை ஏற்று, விடுமுறை தினமான நேற்று (ஜூன் 22) அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வீட்டில் நேற்று மாலை வழக்கு விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில், ‘‘நடிகர் சங்கத் தேர்தலை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் ஜூன் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
கடும் பாதுகாப்பு
அதன்படி இன்று (ஜூன் 23) கடும் பாதுகாப்புக்கு இடையே தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கியது. கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைத் தவிர்த்து வேறு யாரையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு கட்டம் வரைக்கே பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இரண்டு அணிகளுக்கு தனித்தனி இடங்களும், அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள் யாரும் இதுவரை வாக்களிக்க வரவில்லை.
இத்தேர்தலில் நாசர் - பாக்யராஜ் ஆகிய இரு அணிகள் சார்பில் மொத்தமாக 69 பேர் போட்டியிடுகின்றனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கை நடத் தவோ, முடிவுகளை வெளி யிடவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.