தமிழ் சினிமா

’’கமல் இன்னொரு நாகேஷ்; அவர்தான் கிரேஸி மோகனை சரியா பயன்படுத்தினார்’’ - ஒய்.ஜி.மகேந்திரா

வி. ராம்ஜி

‘’கமல்தான் கிரேஸி மோகனை சரியாப் பயன்படுத்தினார். டைமிங் காமெடியில் நாகேஷ் சாருக்கு அடுத்து கமல் மட்டும்தான்’’ என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.

கிரேஸி மோகன் மறைவு குறித்தும் அவருக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஏராளமான விஷயங்களை நடிகரும் நாடக இயக்குநருமான ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்ததாவது:

நாடகம், ஓவியம், சினிமா, கவிதைகள் என எல்லாவற்றிலும் சிறந்துவிளங்கியவர் கிரேஸி மோகன். ஈகோ பார்க்கமாட்டார். கோபப்படமாட்டார். எப்போதும் எல்லோரையும் ஊக்குவித்துப் பாராட்டுகிற குணம், கிரேஸி மோகனிடம் உண்டு. கமல் சார் தான் எனக்கு விசிட்டிங்கார்டு; விசா என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நன்றி மறக்காதவர் மோகன்.

நாடகத்தில் புகழ்பெற்ற, எல்லோராலும் ஈர்க்கப்பட்ட கிரேஸி மோகனின் வசனங்களை, கிரேஸியின் ஸ்டைலை சினிமாவுக்குள் மிக அழகாகக் கொண்டு வந்து இன்னும் புகழ் பெறச் செய்தது கமல்தான். சொல்லப்போனால், கமல் அளவுக்கு கிரேஸி மோகனை யாருமே சினிமாவில் அவர் அளவுக்குப் பயன்படுத்தியதே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கமல் - கிரேஸி மோகன் கூட்டணி இப்படியொரு அபரிமிதமான வெற்றி அடைந்ததற்கு இன்னொரு காரணம்... கமலின் நடிப்புத்திறன். என்னைப் பொருத்தவரை, டைமிங் காமெடியில் நாகேஷுக்கு இணை எவருமே இல்லை. நாகேஷுக்கு அடுத்து, டைமிங் காமெடியில் சட்சட்டென்று எக்ஸ்பிரஷன் மாற்றி, வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் சொல்லும் திறமை, கமலுக்கு உண்டு. கமல்ஹாசனை, இன்னொரு நாகேஷ் என்றுதான் சொல்லவேண்டும். கிரேஸி மோகனின் வசனங்களை அப்படி டைமிங் நடிப்பால், தூக்கிக்கொண்டு போய் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார் கமல். இந்தக் கூட்டணி அற்புதமான கூட்டணி என்று எல்லோரும் இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT