தமிழ் சினிமா

இணையத்தில் கலாய்ப்பவர்களுக்கு வேறு வேலையில்லை: ரகுல் ப்ரீத் சிங்

செய்திப்பிரிவு

சமூக ஊடகங்களில் பிரபலங்களைக் கலாய்த்து, விமர்சித்து, ஆபாசமாகப் பதிவிடுபவர்களுக்கு, செய்வதற்கு வேறு வேலையில்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் இணையத்தில் கலாய்க்கப்படுவது இப்போது சர்வ சாதரணமாகிவிட்டது. சில நெட்டிசன்கள் ஆபாசமாக வசை பாடுவது, கருத்து பதிவது, தேவையில்லாத யோசனைகளைச் சொல்வது என்றும் களமிறங்குவார்கள். முக்கியமாக, சில பெண் நட்சத்திரங்களிடம் முறைதவறிப் பேசுபவர்களும் உண்டு.

சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை ரகுல் பகிர, அது அதீத கவர்ச்சியாக இருக்கிறது, சமூகத்தைக் கெடுக்கிறது என்கிற ரீதியில் பலரும் அவரை வசைபாட ஆரம்பித்தனர்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இதுபற்றிப் பேசுகையில், “சமூக ஊடகங்கள் அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக பல வேலையில்லாத நபர்கள் நம் தேசத்தில் உள்ளனர். நிறைய இலவச இன்டர்நெட் பயன்பாடுக்கான மொபைல் பிளான்கள் உள்ளன. அதனால், மற்றவர்களைப் பற்றியும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் விமர்சிப்பதைவிட இவர்களுக்கு வேறு வேலையில்லை.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு புகைப்படம் பகிர்வதில் என் பெற்றோருக்கோ, நண்பர்களுக்கோ பிரச்சினை இல்லையென்றால், நான் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எல்லாரையும் நாம் திருப்திப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT