மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ இணைப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'பிகில்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு.
பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால், 'தளபதி 63' என்று படக்குழு அழைக்கப்பட்டு வந்தது. சுமார் 80% படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், நாளை (ஜூன் 22) விஜய் தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு 'தளபதி 63' படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்கும், ஜூன் 22-ம் தேதி அதிகாலை 12 மணிக்கு 2-வது லுக்கும் வெளியிடப்படும் எனவும் படக்குழு கூறியுள்ளது.
தற்போது 'பிகில்' என்று பெயரிடப்பட்டு இருப்பதாக கூறி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தில் விஜய் ஃபுட்பால் பயிற்சியாளராக நடித்துள்ளார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.