தன்னுடைய முதல் சர்வதேசத் திரைப்படமான ‘The Extraordinary Journey of the Fakir’-ன் இந்திய வெளியீட்டில் தீவிரமாக இருக்கிறார் தனுஷ். இந்தப் படம், சர்வதேசக் குடியேற்றம் சார்ந்த பிரச்சினையைப் பற்றிப் பேசுவதாகவும், குடியேற்றம் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்வதாகவும் தனுஷ் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆரம்பிக்கும் இந்தக் கதை, பாரிஸ், லண்டன், லிப்யா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணிக்கிறது. அஜதசத்ரு லவாஷ் படேல் என்ற கதாபாத்திரத்தின் பயணம் இது. சர்வதேச அளவில் குடியேறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, இந்தக் கதை பேசுகிறது.
இதுபற்றி பேசியுள்ள தனுஷ், “குடியேற்றம் சார்ந்த பிரச்சினைகளை நேர்மறையாகவே காட்டியிருக்கிறோம். இதனால் மாற்றம் ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம். ஆனால், நாங்கள் படம் எடுத்த நோக்கம் அதுதான். அடிப்படையில் இது அஜதசத்ருவின் பயணம். அது எப்படி சர்வதேசக் குடியேற்றத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதே படம்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்களுடன் நடித்தது, வெவ்வேறு சித்தாந்தங்களைத் தெரிந்து கொண்டது அற்புதமான அனுபவம். படப்பிடிப்பின்போது நிறைய கவனித்தேன். அவர்கள் நடிப்பை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
கென், ஒரு சர்வதேச இயக்குநர். அவரது பாணி, நம்மிலிருந்து வித்தியாசமானது. அதெல்லாம் எனக்கு நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது. சர்வதேசத் திறமைகளுடன் வேலை செய்தது என் அதிர்ஷ்டமே.
ரசிகர்களுக்குப் படம் பிடித்தது என்றே நினைக்கிறேன். சில முக்கிய ஊர்களுக்குச் சென்றோம். அங்கிருப்பவர்கள் படத்தைப் பாராட்டினார்கள். ஆனால், சர்வதேச அளவில் ஒரு படத்தின் வியாபாரம் குறித்துப் பேசும் அளவு எனக்கு அனுபவம் இல்லை என நினைக்கிறேன். கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிபெறும் திறன் உள்ளது. ஆனால், அதை என்னால் ஆராய்ந்து சொல்ல முடியாது.
எனக்கு நல்ல படங்களில் பங்காற்ற வேண்டும். மாநிலம், மொழி என அதற்கு எந்தத் தடையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். தமிழோ, இந்தியோ, ஆங்கிலமோ... கதை நன்றாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். ஒரு கதையைப் படிக்கும்போது, அதனுடன் எவ்வளவு தூரம் என்னால் சம்பந்தப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே முக்கியம். அந்தத் தாக்கம்தான் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறது” என்றார்.
வருகிற 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழில் ‘பக்கிரி’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.