தமிழ் சினிமா

மேடை நாடக உலகின் கருப்பு நாள் இன்று: நடிகர் மோகன் ராமன் வருத்தம்

செய்திப்பிரிவு

மேடை நாடக உலகின் கருப்பு நாள் இன்று என்று கிரேசி மோகனின் மறைவு குறித்து நாடக நடிகர் மோகன் ராமன் தெரிவித்துள்ளார்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரின் மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், இலக்கிய உலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கிரேசி மோகன் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் நாடகக் கலைஞரான மோகன் ராமன். அவர் பேசும்போது, ''மேடை நாடக உலகத்துக்கு பெரிய கருப்பு நாள் இன்று. அவரின் மறைவை அறிந்ததில் இருந்து அதிர்ச்சியில் உள்ளேன்.

அவர் மிகச்சிறந்த எழுத்தாளர். எல்லாவற்றையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்த்த நல்ல ஆத்மா. எல்லோருக்கும் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று எண்ணுபவர். அவரின் படங்களில் ஒரு ஜோக்கை ரசித்து முடிப்பதற்குள் அடுத்த ஜோக் வந்துவிடும். அதனால் அவற்றை மீண்டும் பார்க்கும்போது புதிதாகத் தெரியும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜோக்கைப் பார்த்து சிரிப்போம்.

குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர். தனது மனைவியின் பெயரான ஜானகியைப் படங்களில் உள்ள கதாபாத்திரங்களுக்கு வைக்காமல் இருக்க மாட்டார்'' என்றார் மோகன் ராமன்.

SCROLL FOR NEXT