நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயிக்க ஆளுங்கட்சி எம்எல்ஏ மூலம் ஐசரி கணேஷ் பணம் கொடுக்கிறார் என கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வருகிற 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
ஆனால், நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் முறைகேடாக நடைபெற்றுள்ளது என வழக்கு தொடர்ந்த காரணத்தால், இந்தத் தேர்தல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியில் போட்டியிடும் ஐசரி கணேஷ், ஆளுங்கட்சி எம்எல்ஏ மூலம் பணப்பட்டுவாடா செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார் பாண்டவர் அணியில் போட்டியிடும் கருணாஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 61 உறுப்பினர்கள் திடீரென நீக்கப்பட்டு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் மாவட்டப் பதிவாளர் தேர்தலை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். ஆனால், 61 உறுப்பினர்களை நீக்கியது சட்டப்படி சரியே என்று உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 20) மதியம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, சுவாமி சங்கரதாஸ் அணியினர், இந்தத் தேர்தலில் எதையாவது செய்து, எப்படியாவது வெல்லவேண்டும் என்று பல்வேறு குளறுபடி வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலத்தில் உள்ள அனைத்து நாடகக் கலைஞர்களின் குடும்பங்களுக்கும், வீடுவீடாகச் சென்று பணம் விநியோகம் செய்கின்றனர். ஐசரி கணேஷ் ஏற்பாட்டில் இது நடக்கிறது. ஆளுங்கட்சி எம்எல்ஏ சக்திவேல், சேலம் முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோரின் துணையோடு இந்தப் பணபரிமாற்றம் நடக்கிறது.
தமிழ்நாடு பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக, தண்ணீர்ப் பிரச்சினையில் அல்லோலப்படுகிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு, மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய எம்எல்ஏ சக்திவேல், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ஐசரி கணேஷிற்கு வாக்கு சேகரிக்கப் பணம் கொடுக்கும் துரோகச்செயலில் ஈடுபடுவது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தற்சமயம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பாண்டவர் அணியான நாங்கள், உச்சி மலைமீது முக்கால் பகுதி ஏறிவிட்டோம். இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளது, அது வெற்றியின் அடையாளமே!
ஆனால், சுவாமி சங்கரதாஸ் அணியினர், குறுக்கு வழியில் கொள்ளைப்புறம் வழியாக நுழைய நினைக்கின்றனர். அது ஒருபோதும் நிலைக்காது. பணம் கொடுத்து வாக்கு வாங்க நினைக்கும் சுவாமி சங்கரதாஸ் அணியினர், மூன்று ஆண்டுகள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி களத்தில் நிற்கும் பாண்டவர் அணியினரை வெல்ல முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் கருணாஸ்.