தமிழ் சினிமா

வசூல் சக்கரவர்த்தி விஜய்!

ஸ்கிரீனன்

தற்போது தமிழ்த் திரையுலகில் பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம் வருவதில்லை என்றெல்லாம் பேச்சுகள் உலவிவரும் நிலையில், விநியோகஸ்தர்களுக்கு விஜய் படம் வெளியாகிறது என்றாலே குஷிதான். காரணம் படத்தின் வசூல். அந்த அளவுக்கு கல்லா கட்டும்.

சம்பளம், படப்பிடிப்பு செலவு, இறுதிக்கட்டப் பணிகள் செலவு, விளம்பரச் செலவு என செலவுகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தயாரிப்பாளருக்கு வருமானம் என்பது குறைந்து கொண்டுதான் வருகிறது. அதனால் தான் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்கள் பலரும் படத்தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். ஆனால், விஜய் கால்ஷீட் தருகிறார் என்றால் தயாரிக்க அவர்களும் தயார் தான். காரணம் படத்தின் வசூல்.

பட்டிதொட்டியெங்கும் விஜய்

தொடக்க  காலத்தில் பல படங்கள் விஜய்க்கு நல்ல பெயரை எடுத்துக் கொடுக்கவில்லை. பட்டிதொட்டியெங்கும் விஜய்யைக் கொண்டு போய் சேர்த்த படம் 'பூவே உனக்காக' என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அது தான் விஜய்க்கு நல்ல பெயரையும், நல்ல நடிகர் என்ற அந்தஸ்தையும் எடுத்துக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் பெரிய உச்சத்துக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து 'துள்ளாத மனமும் துள்ளும்', 'லவ் டுடே', 'காதலுக்கு மரியாதை', 'குஷி', 'ப்ரியமானவளே' என தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கினார்.

அனைத்துப் படங்களுமே விஜய்யை சம அந்தஸ்திலேயே வைத்திருந்தது. வசூல் ரீதியிலும் பெரிய வெற்றி என்ற ரீதியில் எதுவும் அமையவில்லை. அவரை கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்துக்கு உயர்த்திய முதல் படம் 'திருமலை'. முழுக்க ஆக்‌ஷன் ஹீரோ, பஞ்ச் வசனங்கள் என கலந்துகட்டி சிக்ஸர் அடித்தார்.

அதற்குப் பிறகு 'கில்லி', 'திருப்பாச்சி', 'சிவகாசி' என இவரது கமர்ஷியல் பாதை என்னமோ நீண்டு கொண்டே தான் இருக்கிறது. 'நண்பன்' என்ற ரீமேக் படம், 'துப்பாக்கி', 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', 'சர்கார்' என விஜய்யின் வியாபார மார்க்கெட் ஒவ்வொரு படத்துக்கும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

வியாபாரத்தில் விஜய்யின் ப்ளஸ்

வியாபாரம் வளர வளர விஜய்யின் கதைக்களங்கள் தேர்வும் மாறிக் கொண்டே வந்தது. ஆனாலும், இடை இடையே பி மற்றும் சி சென்டர் படம் ஒன்றில் நடித்துக் கொண்டே வந்தார். அவை வியாபார ரீதியில் தோல்வியாகவே அமைந்தது. தோல்வி என்றால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என்ற ரீதியில் விஜய்யின் சமீபத்திய படங்கள் தோல்வியடையாதது பெரிய ப்ளஸ்.

தயாரிப்பாளருக்கு நஷ்டமே இல்லை எனும் போது, 'மெர்சல்' படத்துக்குப் பிறகு அந்த தயாரிப்பாளர் நலிவடைந்துவிட்டாரே என்ற கேள்வி எழாமல் இல்லை. இது தொடர்பாக முன்னணி விநியோகஸ்தரிடம் கேட்ட போது, “'மெர்சல்' படத்துக்கு முன்பு அந்த தயாரிப்பாளர் வெளியிட்ட, தயாரித்த பல படங்கள் தோல்வி. அதில் உள்ள பாக்கி அனைத்தையும் 'மெர்சல்' படத்தின் வசூலில் எடுத்துக் கொண்டோம். அப்படியென்றால், அவர்களுக்கு இருந்த மொத்த கடனையும் ஒரு படத்தில் அடைத்துவிட்டார் என்று தானே அர்த்தம். இப்போது அவருக்கு பைனான்ஸ் தர யாரும் முன்வரவில்லை. அதுவே பிரச்சினை. மற்றபடி, 'மெர்சல்'  படத்தால் இந்த நிலைக்கு வந்துவிட்டார்  என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்று தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் ரஜினி படங்கள் தான் அதிக வசூல் செய்யும் என்று இருந்தது.  சமீபமாக விஜய் படங்கள், ரஜினி படங்களைத் தாண்டியும் வசூல் செய்து வருகிறது என்கிறார்கள் முன்னணி விநியோகஸ்தர்கள். இப்போது விநியோகஸ்தர்களின் நாயகன் என்றால் விஜய் தான். ஏனென்றால் 'புலி', 'பைரவா' போன்ற படங்களில் வேறு ஏதாவது ஒரு நாயகன் நடித்திருந்தால், அதன் தோல்வி வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், தற்போது இரண்டு படங்கள் தோல்வி தான் என்றாலும் பெரிய தோல்வியில்லை என்கிறார்கள்.

தெறித்த அரசியல் பார்வை

Sarkarjpg100 

'மெர்சல்' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களின் பெரிய வசூலுக்கு அரசியல் எதிர்ப்பும் மிக முக்கியமான காரணம். 'மெர்சல்' படத்துக்கு பாஜகவும், 'சர்கார்' படத்துக்கு அதிமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவுக் குரல் கொடுத்தாலும், 'சர்கார்' படத்துக்கு ஆதரவாக எந்தவொரு கட்சியுமே குரல் கொடுக்கவில்லை. இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து "இனிமேல் அரசியல் ரீதியாக எந்தவொரு எதிர்ப்பும் வராத வகையில் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று தன் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார் விஜய். அதனால், இனிமேல் வரும் படங்களில் அரசியல் பார்வை இருந்தாலும், எதிர்ப்பு வரும் வகையில் இருக்காது என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

விநியோகஸ்தர்கள் என்ன சொல்கிறார்கள்?

”வியாபாரத்தில் விஜய் பெரிய உச்சத்தில் இருக்கிறார். அவர் அதிலிருந்து இறங்காத வகையில் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சமீபமாக அவருடைய படத்தின் தயாரிப்பு செலவே 100 கோடி ரூபாய் வரை வந்துவிடுகிறது. அவரது சம்பளம், இயக்குநர், ஒளிப்பதிவாளர், நாயகி, இசையமைப்பாளர் என அனைவரது சம்பளம் சேர்ந்தால் 45 கோடி ரூபாய் வந்துவிடுகிறது. சில இளம் இயக்குநர்கள் நல்ல கதைகளோடு இருக்கிறார்கள். அவர்களிடம் விஜய் கதை கேட்க வேண்டும்.

ரஜினி எப்படி திடீரென்று ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுத்து ஆச்சர்யம் அளித்தாரோ, அப்படிப்பட்ட வாய்ப்புகளை விஜய்யும் கொடுக்க வேண்டும். அந்தவொரு மாற்றம் 'தளபதி 64' படத்திலிருந்து தொடங்கியிருப்பதாக கருதுகிறோம். அதை விஜய் தொடர வேண்டும்” என்கிறார்கள் முன்னணி விநியோகஸ்தர்கள்.

SCROLL FOR NEXT