இயக்குநர் எழிலின் அடுத்த படத்தில் நடிகர் பார்த்திபனை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஹாரர் ஃபேன்டஸி படமான இதில், ஹீரோயினாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனத் தலைப்பிட்டு படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று (ஜூன் 25) முதல் 7 நாட்களுக்கு தாய்லாந்து நாட்டில் நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஜி.வி.பிரகாஷ், ஈஷா ரெப்பா உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் எழில் தனது அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இயக்க இயக்குநர் எழில் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நடிகர் பார்த்திபனை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முழுக்க புதுமுகங்கள் ஒரு படம் எடுக்க முயற்சி செய்வது போலவும், அதற்கு ஒரு தாதா (பார்த்திபன்) தான் இசையமைப்பாளராகப் பணிபுரிவேன் என்று இடைஞ்சல் கொடுப்பது போலவும் இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எழில் உருவாக்கியுள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகவுள்ளது. 'ஆயிரம் ஜென்மங்கள்' முடித்துவிட்டு, இந்தப் புதிய படத்தில் எழில் கவனம் செலுத்தவுள்ளார்.
தற்போது பார்த்திபன் இயக்கி நடிக்கும் 'ஒத்த செருப்பு' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.