நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் ஒட்டு போட்டுவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் விவேக் பேசும் போது, “நடிகர் சங்கத் தேர்தலுக்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை மீடியாக்கள் கொடுத்திருக்கிறது. அது சந்தோஷம் தான். சிட்லபாக்கம் ஏரி, மணப்பாக்கம் ஏரி உள்ளிட்டவற்றை பொதுமக்களே தூர் வாருகிறார்கள்.
நிறையப் பேர் தங்களது வீட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தைத் தொடங்கி அதை வீடியோவாக எடுத்து வெளியிடுகிறார்கள். குளம் தூர்வாருதல், மரம் நடுதல் போன்றவற்றையும் மக்களிடையே கொண்டுபோய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்” என்று பேசினார் விவேக்.