இருட்டைக் கண்டாலே பயந்து நடுங்கும் ஒருவரின் கைகளில் உள்ள டாட்டூ திடீரென வலியைக் கொடுக்க, அந்த பயமும் வலியும் கொலைத்துரத்தலுமாக இருக்க... அதையெல்லாம் அவர் எப்படிக் கடக்கிறார் என்பதுதான் ‘கேம் ஓவர்’ திரைப்படம் சொல்லும் கதை.
படத்தின் தொடக்கத்திலேயே கொடூரமாக நிகழும் கொலை ஒன்று. அதையடுத்து விரியும் கதையில், கேமர் தாப்சி. அவருக்கு உளவியல் ரீதியான பிரச்சினை. போதாக்குறைக்கு கையில் குத்திக்கொண்டிருக்கும் டாட்டூ திடீரென வலிக்கிறது. இந்த இரண்டு இடங்களையும் இணைவதும் அதற்கான காரணங்களுமாக கொண்டு விரிகிறது திரைக்கதை. ஒரு மர்மப்படத்துக்கு உண்டான அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கிய திரைக்கதை என்பதில் மாற்றமே இல்லை.
படத்தில் மிகக் குறைந்த மாந்தர்கள். அதாவது கேரக்டர்கள். அவர்களைக் கொண்டே திரைக்கதை அமைக்கும் போது, சில சமயம் சோர்வு தட்டும் அபாயமும் உண்டு. ஆனால், இதில் அப்படியெல்லாம் இல்லாமல், ரொம்பவே சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க தாப்சி நடிப்பால் விளையாடியிருக்கிறார். அவர் வருகிற காட்சியிலும் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாப்சிக்கு இது முக்கியமான படம்.
தாப்சி வீட்டில் வேலை செய்யும் வினோதினி, அமுதா, ரீனா கேரக்டர்கள் எல்லாமே கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். படத்தில் பெரிய பங்கு இல்லையென்ற போதும், வருகிற காட்சிகளில் மிகையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
வசந்தின் ஒளிப்பதிவு அழகு. ரிச்சர்டு எடிட்டிங்கில் ரொம்பவே அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார். ரான் ஈதன் யோஹானின் பின்னணி இசையில் அத்தனை நேர்த்தி. இடைவேளைக்கு முன்னதாக வருகிற சிறிய ப்ளாஷ்பேக், நெகிழ்ச்சி. படத்தில் பாடல்களே இல்லை என்பது படத்துக்கு கூடுதல் ப்ளஸ்.
த்ரில்லர் கதையாக, ஹாரர் கதையாக, நேச்சுரல் ஃபேண்டஸியாக எந்த வகையில் வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கிற படமாக, ‘கேம் ஓவர்’ திரைப்படத்தை இயக்கியதற்கு அஸ்வினைப் பாரட்டலாம். ‘மாயா’வைப் போலவே, படமாக்கிய விதத்தில், மிரட்டியிருக்கிறார் இயக்குநர். சொல்ல வந்த விஷயத்தில் இருந்து எங்கும் நழுவாமல், கதை சொன்ன ஸ்டைல் நன்று.
சின்னச்சின்னதாகக் குறைகள் இருந்தாலும் இயக்குநர் டாட்டூவை வைத்துக்கொண்டு விளையாடிய விதத்தில் ‘கேம் ஓவர்’ ரொம்பவே ரசிக்கவைக்கிறது.