தமிழ் சினிமா

‘தளபதி 63’ அப்டேட்: விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ‘பிகில்’?

செய்திப்பிரிவு

‘தளபதி 63’ படத்தில், ஒரு விஜய்யின் கதாபாத்திரத்துக்கு ‘பிகில்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்துவிடாதவாறு படக்குழு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும், அவ்வப்போது பல விஷயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், விஜய்யின் ஒரு கதாபாத்திரத்துக்கு ‘பிகில்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். அதில், மகன் கதாபாத்திரத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விஜய்யின் பெயர் ‘மைக்கேல்’ எனக் கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் பரவிக் கொண்டிருந்தது. ஆனால், அது விஜய் கதாபாத்திரத்தின் பெயர் அல்ல; விஜய்யின் நண்பனாக நடிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ கதிர் கதாபாத்திரத்தின் பெயர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எடிட்டிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘எடிட் செய்யப்பட்ட இரண்டு பாடல்களை முதல் ஆளாகப் பார்த்தேன்’ என கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.

SCROLL FOR NEXT