பொன்ராம் இயக்கவுள்ள படத்தில், சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா ஆகிய மூவரும் நடிக்கவுள்ளனர்.
பொன்ராம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சீமராஜா’. சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். டி.இமான் இசையமைத்த இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்தார்.
‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொன்னார் பொன்ராம். அந்தக் கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போகவே, நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால், வரிசையாகப் படங்களை ஒப்புக் கொண்டுள்ள விஜய் சேதுபதி, அடுத்த வருடம்தான் (2020) பொன்ராமுக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
எனவே, அதற்குள் ஒரு படத்தை இயக்கி முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் பொன்ராம். இதில், ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து சமுத்திரக்கனி, பாரதிராஜா ஆகியோரும் நடிக்கின்றனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தின் கதையைக் கேட்ட சமுத்திரக்கனி, தானே தயாரிக்க முன்வந்துள்ளார். வேறு சில நிறுவனங்களும் இந்தப் படத்தைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பதால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.