நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் மோகன் வாக்கை யாரோ போட்டுவிட்டதால் குளறுபடி ஏற்பட்டது. சிறப்பு அனுமதியுடன் தன் வாக்கினைப் பதிவுசெய்தார்.
2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று (ஜூன் 23) நடைபெற்று வருகிறது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க மோகன் வந்தார். தனது அடையாள அட்டையைக் காட்டியபோது, உங்கள் வாக்கு ஏற்கெனவே பதிவாகிவிட்டது என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அனுமதியளித்தார் தேர்தல் அதிகாரி. இதனால், தன் வாக்கைத் தனியாக ஒரு கவரில் போட்டுவிட்டுச் சென்றார் மோகன்.
கடந்த நடிகர் சங்கத் தேர்தலிலும் இதே நிலைதான் மோகனுக்கு ஏற்பட்டது. இந்தாண்டைப் போலவே சிறப்பு அனுமதியுடன்தான் கடந்த முறையும் தன் வாக்கைப் பதிவுசெய்தார் மோகன்.
தொடர்ச்சியாக மோகன் வாக்கை வேறு ஒருவர் செலுத்தி வருவது தொடர்பாக பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசர், “கடந்த முறையைப் போலவே இந்தாண்டும் மோகன் வாக்கை யாரோ பதிவு செய்துள்ளனர். இதனைச் சரிசெய்ய வேண்டும்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.