தமிழ் சினிமா

நமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள்: வரலட்சுமி சரத்குமார் வருத்தம்

செய்திப்பிரிவு

நமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், எழுத்தாளர் மற்றும் நடிகரான கிரிஷ் கர்னாட் மறைவும் திரைத்துறைக்குப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், “நமது திரைத்துறைக்கு ஒரு கருப்பு நாள் இன்று. ஒரே நாளில் இரண்டு அற்புதக் கலைஞர்களை இழந்திருக்கிறோம். அவர்கள் இழப்பு கண்டிப்பாக உணரப்படும். நமக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் விட்டுச்சென்ற மரபிலிருந்தும் திறமையிலிருந்தும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்” என ட்விட்டரில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

SCROLL FOR NEXT