தமிழ் சினிமா

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ரோகிணி

செய்திப்பிரிவு

சரண் இயக்கும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் மாற்றுத்திறனாளியாக ரோகிணி நடிக்கிறார்.

'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'பார்த்தேன் ரசித்தேன்', 'ஜெமினி',' ஜேஜே', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அட்டகாசம்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவர் சரண். தற்போது 'பிக் பாஸ்' ஆரவ், காவ்யா தாப்பர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆரவ் அம்மாவாக நடிக்கும் ராதிகா ‘சுந்தரி பாய்’என்ற லேடி டானாக வருகிறார். அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற கதாபாத்திரத்தில் ரோகிணி நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் சரண் கூறும்போது, ''காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணியை அணுகினேன்.

அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார். அவருடனான உரையாடல்கள், காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார்.

படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் காட்சி முடிந்தவுடன் கூட அவர் அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் பிடித்தது.

படத்தை திரையில் காணும்போதும் பார்வையாளர்கள் அதேவிதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள் என்பது ஒரு இயக்குனராக என் அசைக்க முடியாத நம்பிக்கை'' என்றார் சரண்.

சுரபி பிலிம்ஸ் எஸ். மோகன் தயாரிக்கும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் நாசர், யோகி பாபு, பிரதீப் ராவத், சாயாஜி ஷிண்டே, நிகிஷா படேல், தேவதர்ஷினி, சாம்ஸ், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ராமதாஸ், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். சைமன் கே.கிங் இசையமைக்க, கே.வி.குகன் ஒளிப்பதிவாளராப் பணிபுரிந்து வருகிறார்.

SCROLL FOR NEXT