சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மோகன் பாபு.
'என்.ஜி.கே', 'காப்பான்' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன் பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜாக்கி ஷெராஃப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து மோகன் பாபு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது நினைவுகூரத்தக்கது.
'சூரரைப் போற்று' படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி படமாக்கப்படுகிறது. சென்னை, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை, பிரபல சண்டைப் பயிற்சியாளர் க்ரேக் பாவெல் வடிவமைத்துள்ளார். ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’, ‘ஸ்கைஃபால்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு நடுவே, சிவா இயக்கத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.