விஜய் நடித்துவரும் ‘பிகில்’ படத்தில், ஹாலிவுட் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பணியாற்றி வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 21) ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில், எமி மெக்டேனல் மற்றும் ஜஸ்டின் ஸ்கின்னர் என இருவரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
எமி மெக்டேனல், ஏராளமான ஹாலிவுட் படங்களில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர். ‘பீலே’, ‘மில்லியன் டாலர் ஆர்ம்’, ‘ஜாக் அண்ட் ஜில்’, ‘சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
‘பிகில்’ படத்திலும் கால்பந்து தொடர்பான காட்சிகளை அவர்தான் ஒருங்கிணைத்துள்ளார். அவருக்கு உதவியாக ஜஸ்டின் ஸ்கின்னர் என்ற கால்பந்து விளையாட்டு வீரர் செயல்பட்டுள்ளார்.
‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.