தமிழ் சினிமா

மோசமான அம்பயரிங்: ஆஸி - மே.இ.தீ. கிரிக்கெட் போட்டி குறித்து தனுஷ் கருத்து

செய்திப்பிரிவு

நேற்று நடைபெற்ற ஆஸி - மே.இ.தீ. இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.

ஆஸ்திரேலியா - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையில் நேற்று (மே 6) நடைபெற்ற உலகக்கோப்பை, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடுவர்கள் ஒருமுறை, இருமுறை தவறிழைத்தால் ‘மனிதத் தவறு’ என்று அதற்கு ஒரு நியாயத்தை வழங்க முடியும். ஆனால், ஒரு அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாகத் தீர்ப்புகளை வழங்கினால், அது வெறும் தவறு என்பதைத் தாண்டி அநியாயமாகவே மாறும். அப்படித்தான் நேற்று நடந்தது.

நடுவர்கள் கஃபானே, ருசிரா பாலியாகுருகே ஆகியோர் பல தீர்ப்புகளை யோசனையின்றி மே.இ.தீவுகளுக்கு எதிராக வழங்கினர்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 288 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 289 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பயணித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்து, 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்கு, நடுவர்களின் மோசமான அம்பயரிங் தான் காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

“மேற்கு இந்தியத் தீவுகள் அணி எந்தக் காரணம் கொண்டும் வெற்றிபெறவே கூடாது என்று நினைத்த நடுவர், மகிழ்ச்சியாக இருப்பார் என நினைக்கிறேன். வாழ்த்துகள் நடுவரே... நன்றாக ஆடினீர்கள் மே.இ.தீவுகள் அணியினரே! மோசமான அம்பயரிங், சிறப்பாக நடந்தது. ஒருதலைப்பட்சமும் கூட. இதை ஐசிசி விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

SCROLL FOR NEXT