தமிழ் சினிமா

மணிரத்னம் உடல்நிலை குறித்து வதந்தி: சூசகமாக மறுத்த சுஹாசினி

ஸ்கிரீனன்

மணிரத்னம் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார் சுஹாசினி

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். தற்போது  'பொன்னியின் செல்வன்' படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், மோகன்பாபு, அமலா பால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜூன் 16-ம் தேதி மணிரத்னத்துக்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்த வதந்தி தொடர்பாக மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் தனது ட்விட்டர் பதிவில், “எனது கணவர் இன்று காலை 9.30 மணிக்கு வேலைக்குச் சென்றார். என் வீட்டில் நாம் அமைப்பைச் சேர்ந்த பெண்களுக்கான பயிற்சி வகுப்பில் நான் இருந்தேன்.

நாம் அமைப்பின் ரூபா சுவையான ரொட்டியும், மாங்காய் ஊறுகாயும் கொண்டு வந்திருந்தார். என் கணவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.. அவரது திரைக்கதையில் இன்னும் காரத்தைச் சேர்க்க மீண்டும் அலுவலகத்துக்குச் சென்றார்” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சுஹாசினியின் இந்தப் பதிவின் மூலம் மணிரத்னம் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT