தமிழ் சினிமா

சத்குருவுடன் கோல்ஃப் விளையாடும் மணிரத்னம்

செய்திப்பிரிவு

சத்குரு ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மணிரத்னம் கோல்ஃப் விளையாடும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சுஹாசினி.

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், மோகன்பாபு, அமலா பால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், வழக்கமான பரிசோதனைக்காகச் சென்றுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்த வதந்தி தொடர்பாக மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, கடந்த 17-ம் தேதி தனது ட்விட்டர் பதிவில், “எனது கணவர் இன்று காலை 9.30 மணிக்கு வேலைக்குச் சென்றார். என் வீட்டில் நாம் அமைப்பைச் சேர்ந்த பெண்களுக்கான பயிற்சி வகுப்பில் நான் இருந்தேன்.

நாம் அமைப்பின் ரூபா, சுவையான ரொட்டியும், மாங்காய் ஊறுகாயும் கொண்டு வந்திருந்தார். என் கணவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவரது திரைக்கதையில் இன்னும் காரத்தைச் சேர்க்க, மீண்டும் அலுவலகத்துக்குச் சென்றார்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். சுஹாசினியின் இந்தப் பதிவின் மூலம், மணிரத்னம் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மணிரத்னம் கோல்ஃப் விளையாடும் புகைப்படங்களை இன்று (ஜூன் 19) பகிர்ந்துள்ளார் சுஹாசினி. “இன்று காலை யார் கோல்ஃப் விளையாடுகின்றனர் என்று யோசியுங்கள்... மணியும் சத்குருவும்தான். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் சுஹாசினி.

SCROLL FOR NEXT