‘களவாணி 2’ படம் ஜூலை 5-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். சற்குணமே படத்தைத் தயாரித்துள்ளார். வருகிற ஜூலை 5-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜூன் 28-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் தாமதமாக ரிலீஸாக இருக்கிறது.
‘களவாணி 2’ படத்தின் ரிலீஸ் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், பிரச்சினை சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டு ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.