‘’டவல், கமல்னு கிரேஸி மோகனின் சென்டிமென்ட் சின்னக்குழந்தையாட்டம் இருக்கும். ஆனா அதுல விடாப்பிடியா இருப்பார்’’ என்று நாடக இயக்குநர் எஸ்பி.காந்தன் நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
கிரேஸி மோகனின் நாடகங்களை இயக்கும் எஸ்பி.காந்தன், இயக்குநரும் நடிகருமான மெளலியின் சகோதரர். கிரேஸி மோகனுடன் தொடர்ந்து 40 வருடங்களாக நாடகங்களை இயக்கி வருகிறார் இவர்.
சமீபத்தில் ‘இந்து தமிழ் திசை’க்கு எஸ்பி.காந்தன் வீடியோ பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
‘’வெளிநாடுகளிலும் எங்களின் டிராமாக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் கமல் படங்களுக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதிய பிறகு, இன்னும் வரவேற்பு மும்மடங்கானது என்பதுதான் நிஜம்.
‘கமல் படத்துக்கெல்லாம் வசனமெல்லாம் எழுதுவாரே கிரேஸி மோகன்... அவரோட நாடகம் இன்னிக்கி’ என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என எங்கு பார்த்தாலும், ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, காதலா காதலா’, வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படங்களின் வசனத்தையெல்லாம் சொல்லி, கிரேஸி மோகனைச் சூழ்ந்துகொள்வார்கள். அதனால்தான், ‘கமல் எனக்கு விசா, விசிட்டிங்கார்டு என்று சொல்லிக்கொண்டே இருப்பார் கிரேஸிமோகன். அதுமட்டுமல்ல... கிரேஸி மோகனுக்கு சின்னச்சின்ன சென்டிமென்ட்டெல்லாம் உண்டு. டிராமாவோட முதல் நாளன்னிக்கி, கிரேஸி மோகன் என்ன டிரஸ் போட்ருக்காரோ, அந்த டிராமோவோட வெற்றிவிழாவின் போதும் அதே டிரஸ்ஸைத்தான் போட்டுக்கணும்னு நினைப்பார். அந்த டிரஸ், லேசா சாயம் போயிருக்கும். சின்னதாக் கிழிஞ்சிருக்கும். ஆனா அதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார். அந்த டிரஸ்ஸைத்தான் போட்டுக்குவார்.
அதேபோல, அமெரிக்கால டிராமா போடும்போது ஒரு சம்பவம். நாங்க தங்கியிருந்த இடத்துலேருந்து 200 கி.மீ. தூரத்துல டிராமா போடுறோம். கிளம்பி 100 கி.மீ. தூரத்துக்கு வந்துட்டோம். ‘என்னடா அந்த டவலைக் காணோம்’னு கேட்டான் கிரேஸி மோகன். டிராமா போடுறவங்க எவ்வளவோ சொல்லியும் மோகன் கேக்கவே இல்ல. ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’னு சொல்றோம். கேக்கலை. ‘டிராமால ஆடியன்ஸ் சிரிக்கணும்னுதானே. அப்படிச் சிரிக்கணும்னா, அந்த டவல் வேணும்னு உறுதியாச் சொல்லிட்டான். அப்புறம், திரும்பவும் 100 கி.மீ. போய், ஹோட்டல்ல டவலைத் தேடி எடுத்து, திரும்பவும் டிராமா போடப் போனோம்.
இப்படித்தான் கமல் சாரும்! டிராமா சார்பா ஒரு விழா, கிரேஸி கிரியேஷன்ஸ்ல ஒரு விழா... அப்படீன்னா, கமல் அந்த விழாவுக்கு வந்தேயாகணும். கமலை இன்வைட் பண்ணிருவார். கமல் வரணும். அப்படி வர்றதை, கிரேஸி மோகன் ஒரு செண்டிமெண்ட்டாவே வைச்சிருந்தார். மொத்தத்துல மோகன், ஒரு சின்னக்குழந்தை மாதிரி!
இவ்வாறு எஸ்பி.காந்தன் தெரிவித்தார்.