தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் அடுத்தபடத் தலைப்பு ‘க/பெ. ரணசிங்கம்’

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்துக்கு, ‘க/பெ. ரணசிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கிவரும் இந்தப் படத்தில், ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மீசையுள்ள கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு நிவேதா பெத்துராஜும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வந்தது. விஜய் சேதுபதியும் வில்லனும் மோதும் சண்டைக் காட்சியை அங்கு படமாக்கினர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை, நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. ‘க/பெ. ரணசிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, பெ.விருமாண்டி இயக்குகிறார். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ படம், வருகிற 21-ம் தேதி ரிலீஸாகிறது. எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இதில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT