கரைக்கு வந்தும் ஏதுமின்றித் திரும்பும் அலையாகத் திரும்புகின்றேன் என கருணாநிதி குறித்து ட்வீட் செய்துள்ளார் வைரமுத்து.
கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 3) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக உறுப்பினர்கள் மட்டுமின்றி, கருணாநிதி மீது அன்பு கொண்ட பலரும், அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் கவிஞர் வைரமுத்து. அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும்,
“ஒருநாளும்
காத்திருக்கச் செய்ததில்லை.
கண்களால் வரவேற்பாய்;
புன்னகையால் பேசுவாய்;
பெருஞ்சிரிப்பூட்டிக்
கோபாலபுரம் குலுங்கச் செய்வாய்.
இன்று
கரைக்கு வந்தும்
ஏதுமின்றித் திரும்பும்
அலையாகத் திரும்புகின்றேன்” என்ற கவிதையையும் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
கடந்த வருடம் (2018) ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி கருணாநிதி மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.