ரஜினி சாரால் ஓட்டு போட முடியாதபோது நாம் ஓட்டு போட வேண்டுமா? என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் தபால் வாக்கு அளிக்க, வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால் ரஜினியால் வாக்களிக்க முடியவில்லை. இது தொடர்பாக தனது வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ரஜினி. மேலும், நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் இடம் நேற்று (ஜூன் 22) இரவு தான் முடிவானது.
அவசர கதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணியில் போட்டியிடும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “எதிரணியின் அவசரத்தாலும் விரக்தியாலும் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கிறது. முறைகேடாகவும் பொறுப்பில்லாமலும் தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.
எப்படியோ.. கடவுள் இருக்கிறார். கட்டியது யாரோ போஸ் கொடுப்பது யாரோ? தலையெழுத்து. நிதி கொடுப்பவர்களும், நடிகர்களும் உங்களுடைய சுயநலத்துக்கும் பதவிக்கும் புகழுக்கும் உதவமாட்டார்கள். ஐசரி கணேஷுக்கு நீங்கள் செய்த துரோகமும், அவரைப் பற்றி கூறும் பொய்களும் உங்களுக்கு உதவப் போவதில்லை. உயர்ந்த மனிதரான பாக்யராஜை நீங்கள் கேள்வி கேட்பது வெட்கக்கேடு.
என்னைப் பொறுத்தவரை பாண்டவர் அணி தோல்வி பயத்தில் எப்போது பொய்களையும் அவதூறையும் பரப்ப ஆரம்பித்ததோ அப்போதே தோற்று விட்டார்கள். சுவாமி சங்கரதாஸ் அணியின் உதவியில்லாமல் உங்களால் நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டவே முடியாது. நடிகர் சங்கம் அனைவருக்கும் பொதுவானது. என் கொள்ளுத் தாத்தா கே. சுப்ரமணியம் இச்சங்கத்தை ஆரம்பித்த காரணமே அதுதான்.
தபால் ஓட்டுகளை பாண்டவர் அணி சரியாக அனுப்பாமலும், அராஜகம் செய்து கொண்டும் இருக்கும்போது கமல் சார் இன்று ஓட்டு போடுவாரா? இது நியாயமான தேர்தல் இல்லை. இது போன்ற அராஜகங்களுக்கு கமல் சார் ஆதரவு கொடுப்பாரா? ஓட்டு போட நினைத்த அனைத்து நடிகர்களும் ஓட்டு போட முடியாமல் போனபோது நீங்கள் ஓட்டு போடுவீர்களா கமல்?
பாண்டவர் அணியின் அராஜகங்களை ஏற்றுக் கொண்டு இந்த நியாயமற்ற தேர்தலில் ஓட்டு போடுவீர்களா? இதை நான் அனைத்து நடிகர்களிடமு கேட்க நினைக்கிறேன். ரஜினி சாரால் ஓட்டு போட முடியாதபோது நாம் ஓட்டு போட வேண்டுமா?” என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.