செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
செல்வராகவன் இயக்கத்தில் நேற்று (மே 31) வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
“ ‘என்.ஜி.கே.’, தைரியமான, தனித்திறனுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு படம். இன்றைய அரசியல் யதார்த்தத்தை, ஏளனத்துடன் எடுத்துச் சொல்கிறது. படம் முழுவதும் செல்வராகவன் சாரின் பாணி. சூர்யாவின் சக்திவாய்ந்த அற்புத நடிப்பு. எனக்குப் பிடித்தது” எனத் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
“ ‘என்.ஜி.கே.’ படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என இன்று (ஜூன் 1) காலையில் செல்வராகவன் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.