தமிழ் சினிமா

திரை விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

செய்திப்பிரிவு

ரியோ ராஜ், சுட்டி அரவிந்த், ஆர்ஜே விக்னேஷ் மூவரும் ஆதரவற்றவர்கள். அரவிந்த், மருந்துக்கடையில் வேலை செய்கிறார். மற்ற இருவரும் முழுநேர தொழிலாக யூ-டியூப் சேனல் நடத்துகின்றனர். ஒரு மாலில் யூ-டியூப் சேனல் நிகழ்ச்சி நடத்தும்போது, பெரும் பணக்காரரான ராதாரவியின் அறிமுகம் கிடைக்கிறது.

தான் சொல்லும் 3 வேலைகளை மறுக்காமல் செய்து முடித்தால், அதிக பணம் தருவதாக கூறுகிறார் ராதாரவி. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக் கும் ரியோ ராஜ், விக்னேஷ் இரு வரும் அந்த சவாலை ஏற்கின்றனர். தொலைக்காட்சி நிருபரான ஷிரின் காஞ்ச்வாலாவின் உதவியை நாடு கின்றனர். ராதாரவி அந்த பணிகளை ஏன் இவர்களிடம் கொடுத்தார்? இரு வரும் அதை வெற்றிகரமாக முடித் தார்களா? இதற்கான விடைதான் மீதிக் கதை.

தமிழ் யூ-டியூப் சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இப்படம் மூலம் இயக்குநராக திரைத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். யூ-டியூப் சேனல் நிகழ்ச்சிகள் போலவே நகைச்சுவை, சமூக அக்கறைக்கு முக்கியத்துவம் அளித்து படம் எடுத்திருக்கிறார். ஒருவருக்கு ஒருவர் கலாய்த்துக் கொள்ளும் பாணியிலான நகைச் சுவை, நடப்பு சமூக, அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்வது, படம்பிடிக்கப்பட்ட விதம். செட், சமூக அக்கறை சார்ந்த வசனங்கள், வசன உச்சரிப்பு ஆகியவற்றிலும் யூ-டியூப் சாயல்.

தொலைக்காட்சிப் பிரபலமான ரியோ ராஜ், விக்னேஷ் இரு வரும் நகைச்சுவையில் குறை வைக்க வில்லை. சீரியஸான காட்சிகளில் கஷ்டப்பட்டு கரை யேறுகின்றனர். நிருபராக வரும் ஷிரின் காஞ்ச்வாலா வின் நடிப்பும் சிறப்பு. ராதாரவி வழக்கம்போல தன் அனுபவ முத்திரையை பதித்திருக்கிறார்.

தரமான நகைச்சுவை, வலுவான திரைக்கதை இல்லாமல் படத்தின் முதல் பாதி ஏனோதானோ என்று நகர்கிறது. மோதலில் தொடங்கி காதலில் முடியும் வழக்கமான நாயகன் - நாயகி காட்சிகள், உண்ணாவிரதம் இருக்கும் அமைச் சரை தட்டிக் கேட்டு நாயகன் செய்யும் ஹீரோயிசம், ஒருவித உணர்வு பிழியலாக சாலையோர எளிய மனிதர்கள் இருவரைக் காட்டும் காட்சிகள் என படத்தில் ஆங்காங்கே அமெச்சூர்தனம்.

நாயகனும், நண்பரும் எப்போது சீரியஸாக இருக்கிறார்கள், எப்போது காமெடி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களிடம் இருப் பது விளையாட்டுத்தனமா, பொறுப் பின்மையா, முட்டாள்தனமா என் பதையும் புரிந்துகொள்ள முடிய வில்லை. இந்த தெளிவின்மை படத்தின் மற்ற விஷயங்களிலும் தெரிகிறது. ஆனால், ஷபீர் இசை, யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு ஆகிய மூன்றும் இதையெல்லாம் ஈடுகட்டி, ‘ஓடு ராஜா ஓடு’ என்று படத்தை ஓடவைக்கின்றன.

படம் தொய்ந்துபோகும் நேரத் தில் தூக்கி நிறுத்துகிறார் நாஞ்சில் சம்பத். அவர் வரும் 20 நிமிடங்களும் கலகல. கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சீரியஸாக நகர்கிறது. ராதாரவி ஏன் இப்படி செய் கிறார் என்பதைக் காட்ட ஒரு ஃபிளாஷ்பேக் வருகிறது. அதன் மூலம் ‘அநியாயத்தை வேடிக்கை பார்க்காமல் அனைவரும் தட்டிக் கேட்க வேண்டும்’ என்ற செய்தியை சொல்ல முயல்கிறார் இயக்குநர். இது முக்கியமான செய்தி என் றாலும், சொல்லப்பட்ட விதத்தில் சினிமாத்தனம் மேலோங்குவது மைனஸ்.

மொத்தத்தில் கொஞ்சம் சிரிப்பும், சமூக அக்கறையும் இருக்கும் இப்படத்தில் வலுவான கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும் இருந்திருந்தால் சிறப்பாக இருந் திருக்கும்.

SCROLL FOR NEXT