‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலைத் தழுவி ‘கொலைகாரன்’ படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர்.
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’. அர்ஜுன், விஜய் ஆண்டனி இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வல் என்ற மாடல் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது.
சீதா, நாசர், இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். இதன் மொத்தப் படப்பிடிப்பும் செட் போட்டு சென்னையில் படமாக்கப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் மே 7-ம் தேதி ரிலீஸ் என மாற்றப்பட்டது.
இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்லைடு விடுபட்டுவிட்டதாக ட்வீட் செய்துள்ளார் இயக்குநர்.
“அன்பான ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கவனத்துக்கு, படத்தின் தொடக்கத்தில் இந்த ஸ்லைடு இடம்பெறத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஃபைனல் பிரின்ட்டில் இது விடுபட்டுவிட்டது. ஒரு இயக்குநராக நான் இதை ஒப்புக் கொள்கிறேன். ‘கொலைகாரன்’ படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரு லூயிஸ்.
அந்த ஸ்லைடில், ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.
கமல் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.