இப்போது படம் எடுப்பது சூதாட்டம் மாதிரி ஆகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. ராம்ஜி ஒளிப்பதிவுள்ள செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றியுள்ளார்.
ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடிப்பது என்ற புதிய முயற்சியைத் தமிழ் சினிமாவில் கையாண்டுள்ளார் பார்த்திபன். விரைவில் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. மேலும், உலகத் திரைப்பட விழாக்களிலும் இதைத் திரையிடத் திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்.
இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்குப் பேட்டியளித்த பார்த்திபனிடம், “நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, குழந்தைகள் செலவு என வரும்போது வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக இருக்கிறது?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. வாடகை அலுவலகத்தில் தான் இருக்கிறேன். மாதம் ஒண்ணாம் தேதியானால் சரியாக வாடகை கொடுத்து விடுவேன். எவ்வளவு தேவையோ, அதைத்தாண்டி வாழாத வாழ்க்கையாகப் பார்த்துக் கொள்கிறேன்.
அனைத்து விஷயங்களையும் நான் சுருக்கிக் கொண்டதற்கு காரணம், நினைத்த மாதிரி ஒரு படம் எடுக்கத்தான். என்னுடைய எளிமையான வாழ்க்கையால் இது சாத்தியமாகிறது. இந்தப் படத்தை இவ்வளவு விலைக்கு விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
நான் சூதாடவில்லை. ஆனால், இப்போது படம் எடுப்பது சூதாட்டம் மாதிரி ஆகிவிட்டது” எனப் பதில் அளித்துள்ளார் பார்த்திபன்.