அஜித்தின் 60-வது படத்தின் படப்பிடிப்பு, வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், அமிதாப், டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஜித்துடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து, அஜித்தின் 60-வது படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ளது. இதில், பைக் ரேஸராக அஜித் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் மற்றும் கார் பந்தயங்களில் ஆர்வம் உள்ளவரான அஜித், பல பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார். எனவே, கதை விவாதத்திலும் அஜித் கலந்துகொண்டு, தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு, வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாமே செட் போடப்பட்டுதான் எடுக்கப்படுகின்றன. அதுவும் தமிழ்நாட்டுக்குள் செட் போட்டால் அஜித்தைப் பார்க்க நிறைய கூட்டம் கூடிவிடுகிறது என்பதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படம்பிடிக்கப்படும். எனவே, இந்தப் படத்துக்கான செட்டும் அங்கு போடப்படும் எனத் தெரிகிறது.
மேலும், புடாபெஸ்ட், தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.