சீனாவில் ‘2.0’ படம் வெளியாகாது என்று தெரிகிறது. படத்தை அங்கு வெளியிடவிருந்த ஹெச்ஒய் மீடியா நிறுவனம், படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘2.0’. கடந்த வருடம் (2018) நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக அமைந்த இந்தப் படம், தமிழில் எடுக்கப்பட்டது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. பல வசூல் சாதனைகளைப் படைத்த இந்தப் படத்தில், சமூக நலனுக்கான கருத்துகள் சொல்லப்பட்டன.
இந்நிலையில், ‘2.0’ படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்தனர். ஹெச்ஒய் மீடியா நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த முடிவில் இருந்து அவர்கள் பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
காரணம், இதற்குமுன் சீன மொழியில் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படம், சீனாவில் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. ‘2.0’ திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும்.
ஆனால், ‘2.0’ வெளியாகும் சமயத்தில் ‘த லயன் கிங்’ படத்தையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதால், படத்தை வெளியிட்டு நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, வெளியிடாமல் குறைந்த அளவு நஷ்டத்தைச் சமாளிக்கலாம் என்று அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்த அதிகாரபூர்வமான செய்தி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.