தமிழ் சினிமா

‘கொலவெறி’ பாடலையும், ‘ரவுடி பேபி’ பாடலையும் ஒப்பிடக்கூடாது: தனுஷ்

செய்திப்பிரிவு

‘கொலவெறி’ பாடலையும், ‘ரவுடி பேபி’ பாடலையும் ஒப்பிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபுதேவா நடன இயக்குநராகப் பணிபுரிந்த இந்தப் பாடலில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடினர்.

இந்தப் பாடலின் வீடியோ, கடந்த ஜனவரி 2-ம் தேதி யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டது. இதுவரை சுமார் 54 கோடியே 16 லட்சம் முறை அந்த வீடியோ பார்க்கப்பட்டு, மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் அனைத்துச் சாதனைகளையும் ‘ரவுடி பேபி’ முறியடித்தது.

இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த தனுஷிடம் கேட்டபோது, “ ‘கொலவெறி’ பாடலையும், ‘ரவுடி பேபி’ பாடலையும் ஒப்பிடுவது நியாயமாக இருக்காது என நினைக்கிறேன். வைரல் என்பதை வரையறுத்தது ‘கொலவெறி’.

‘ரவுடி பேபி’ பிரபலமானதில் எனக்கு மகிழ்ச்சி. பிரபுதேவா நடன அமைப்பில் ஆடியது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், நான் இயல்பில் நடனமாடுபவன் கிடையாது. சாய் பல்லவி அற்புதமாக ஆடுபவர். என்னைவிடச் சிறப்பாக ஆடினார். அதிலும் எனக்கு சந்தோஷம்” எனத் தெரிவித்தார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT