தமிழ் சினிமா

தமிழ், தெலுங்கில் உருவாகிறது ‘இன்று நேற்று நாளை 2’: அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடித்தார். கருணாகரன், டி.எம்.கார்த்திக், பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் என ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்தார். வசந்த் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் பால் எடிட் செய்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இன்றுடன் இந்தப் படம் ரிலீஸாகி 4 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். முதல் பாகத்தை எழுதி, இயக்கிய ஆர்.ரவிகுமார், இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

முதல் பாகத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக், இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘Mr. லோக்கல்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் (2020) கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகிறது. நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT