பாண்டவர் அணியின் பிளவுக்குக் காரணம் என்ன என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார் ஐசரி கணேஷ்.
ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி நிலவி வந்தது. திடீரென்று தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டார். உறுப்பினர்கள் சேர்க்கை, பதவி மாற்றம், தகுதி நீக்கம் ஆகிய குளறுபடிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக ஆளுநரைச் சந்தித்து பாண்டவர் அணி மனு அளித்தது. அதனால், இன்று (ஜூன் 20) தமிழக ஆளுநரை சங்கரதாஸ் சுவாமிகள் அணி சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது, பாண்டவர் அணியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஐசரி கணேஷ் பேசும் போது, “பாண்டவர் அணி செய்த உறுப்பினர்கள் நீக்கம், பதிவாளர் தரப்பில் பதிவு செய்யப்படவில்லை. அங்கு Section 7 விதிமுறைப்படி தான் வாக்களார்களை இறுதி செய்வார்கள். அதை பாண்டவர் அணி பெறவே இல்லை. அதை வாங்காமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை வாங்கியிருந்தால் காட்டச் சொல்லுங்கள்.
பாண்டவர் அணி செய்தது அனைத்துமே தவறு. அனைத்துமே முறைப்படி வாங்கிவிட்டேன் என்றால் பதிவாளர் ஏன் நோட்டீஸ் கொடுக்கப் போகிறார். நீதிபதி பத்மநாபனை வைத்துக்கொண்டு நாங்கள் தேர்தலைச் சந்திக்கவே மாட்டோம். அவரை மாற்றியே ஆகவேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இதில் அரசாங்கம் தலையீடு இல்லை என்று கருணாஸ் சொல்லியிருக்கிறார். ஆனால், பூச்சி முருகனோ இதற்குப் பின்னால் தமிழக அரசு இருக்கிறது என்று சொல்கிறார். அவர்களுக்குள் முதலில் ஒற்றுமையே இல்லை. அவர்கள் முதலில் கூடி என்ன செய்யலாம் என ஆலோசிக்கட்டும்.
நடிகர் சங்கத் தேர்தல் முடிந்ததும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், அது முடிந்ததும் ஆர்.கே.நகர் தேர்தல் என விஷால் சென்றதே பாண்டவர் அணியின் பிளவுக்குக் காரணம். இதில் விஷாலை ஆதரித்தவர்கள் கார்த்தி மற்றும் நாசர். இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் நந்தா மற்றும் ரமணா தான்.
துணைத் தலைவராக முக்கியப் பங்கு வகித்த பொன்வண்ணன் ஏன் வெளியே சென்றார்? 3 வருடங்களாக கருணாஸ் எந்த ஒரு மீட்டிங்கிற்குமே வரவில்லை. இப்போது மட்டும் பேசுகிறார். துணைத் தலைவராக இப்போது வருவார், பிறகு அடுத்த தேர்தலுக்குத் தான் கருணாஸைப் பார்க்க முடியும். அதெல்லாம் ஏன் என்று கேளுங்கள். பொதுச் செயலாளர் விஷாலே 18 கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பொதுச் செயலாளர் எங்களுக்குத் தேவையில்லை.
23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், நடிகர் சங்கத் தேர்தலை தமிழக அரசு தலையிட்டு நடத்த வேண்டும். 351 உறுப்பினர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டவுடன் தான் தேர்தல் நடைபெறும்” என்று ஐசரி கணேஷ் பேசினார்.