'ஐ' படத்தில் எனது கதாபாத்திரம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்று 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் 'உன்னோடு நானருந்தால்' என்ற பாடலுக்கு 'ஐ' பட கெட்டப்பில் நாயகி ஏமி ஜாக்சனுடன் விக்ரம் ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்பாடலுக்கு ஆடி முடிந்தவுடன் விக்ரம், "இந்த கெட்டப்பிற்காக மாலை 3 மணியில் இருந்து மேக்கப் போட்டேன். இதே போல் தினமும் படப்பிடிப்பில் மேக்கப் போடுவதற்கு மட்டும் 3 முதல் 4 மணி நேரங்களாகும். மிகவும் பொறுமையாக முடியில் இருந்து அனைத்து உடலமைப்புகளிலும் எனக்கு மேக்கப் போட்ட WETA WORKSHOP சேர்ந்த ஷான் மற்றும் லூக் ஆகியோருக்கு நன்றி." என்று கூறினார்.
இசை வெளியீடு முடிந்தவுடன் நடிகர் விக்ரம் பேசும் போது, "'ஐ' படத்தில் நான் நடித்திருப்பது, கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அந்த பாத்திரத்திற்காக 30 கிலோ உடல் எடையை கூட்டி குறைத்தேன். இதற்காக பசியையும் மறந்து 2 வருடங்களாக உடம்பை வருத்தி நடித்தேன்.
உடல் எடையை குறைக்கும் போது என்னைப் பார்த்து குடும்பத்தினரும், நண்பர்களும் பரிதாப்பட்டார்கள். இப்படி எல்லாம் உடம்பை வருத்தி நடிக்க வேண்டுமா? என்று கேட்டார்கள். இதற்கு பயந்தே நான் வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டேன். எனது ரசிகர்களைக் கூட சந்திக்கவில்லை." என்று கூறினார்.