தமிழ் சினிமா

பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் கோலி சோடா

செய்திப்பிரிவு

இந்த வருடத்தின் துவக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'கோலி சோடா' திரைப்படம், பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில், பசங்க திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் முக்கியப் பாத்திரங்களில் நடித்த திரைப்படம் 'கோலி சோடா'. கோயம்பேடு அங்காடியில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்தத் வருடத்தில் வெளியான பெரிய நடிகர்களின் திரைப்படங்களை விட அதிக வசூலையும் பெற்றது.

தற்போது, 19-வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவில், கோலிசோடா திரையிடப்படவுள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குநர் விஜய் மில்டன், "இந்தத் திரைப்படவிழாவிற்கு எங்கள் திரைப்படம் தேர்வாகியிருப்பது எங்கள் குழுவிற்கு பெருமையைத் தருகிறது. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அதை உயரிய நோக்கோடு தான் எடுத்தோம். இதை நான் மிகப்பெரிய கவுரமாகக் கருதுகிறேன். திரையிடலுக்கு செல்லும் திட்டமும் உள்ளது" என்றார். மில்டன் தற்போது விக்ரம் நடிப்பில், '10 எண்றதுகுள்ள' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தென் கொரியாவில் அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை இந்தத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது. ஆசிய திரைப்பட விழாக்களில் முக்கியமான விழாவாக பூசன் திரைப்பட விழா கருதப்படுகிறது. 'கோலி சோடா', ஆசிய சினிமாக்களுக்கான பிரத்யேகப் பிரிவில் திரையிடப்படுகிறது. பாலிவுட் திரைப்படங்களான 'ஹைதர்', 'ஃபைண்டிங் ஃபானி' ஆகிய திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.

SCROLL FOR NEXT