தமிழ் சினிமா

பொம்மை மாதிரியான கதாபாத்திரங்கள் வேண்டாம் - மணிஷா ஸ்ரீ

மகராசன் மோகன்

விளம்பர உலகில் இருந்து தமிழ்த் திரைக்குள் சமீபத்தில் காலடி எடுத்துவைத்திருக்கும் நடிகை மணிஷா ஸ்ரீ. பூர்வீகம் ஜெய்ப்பூராக இருந்தாலும் பள்ளி, கல்லூரிப் படிப்பையெல்லாம் சென்னையில்தான் முடித்துள்ளார். அதனாலேயே சரளமாக தமிழ் பேசுகிறார். ‘இருக்கு ஆனா இல்ல’ படத்தில் அறிமுகமாகி, இப்போது ‘ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

விளம்பர உலகில் இருந்து சினிமாவுக்குத் தாவ என்ன காரணம்?

சிறுவயதில் வீட்டில் ஏதாவது தவறு செய்தால் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக ஏதாவது சொல்லி நடிப்பேன். அப்போதே ‘என்னை என்னமா ஏமாத்துறா! இவ நல்ல நடிகையா வருவா’ என்று அம்மா செல்லமாக திட்டுவார். அம்மாவின் அந்த ஆசிர்வாதத்தோடு சிறுவயதில் பள்ளியில் நிறைய நாடகங்களில் நடித்தேன். வயது கூடக்கூட போட்டோ ஷுட், கமர்ஷியல் விளம்பர படங்கள் என்று ஆர்வம் அதிகரித்தது.

என் முதல் விளம்பரப்படமே தேசிய அளவிலான படம்தான். மாதத்தில் 20, 25 நாட்கள் விளம்பர படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தேன். கிட்டத்தட்ட 700 விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். அப்போதுதான் இனி சினிமாவிலும் நடித்துப் பார்ப்போமே என்று ஒரு ஆர்வம் வந்தது. அதிர்ஷ்டவசமாக ‘இருக்கு ஆனா இல்ல’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். விளம்பரப் படங்களில் வெற்றிக்கொடி நாட்டியதைப் போல சினிமாவிலும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

‘ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் எப்படி வந்திருக்கிறது?

வீட்டில் நான் எப்படி ஜாலியாக, எமோஷனலாக இருப்பேனோ, அப்படித்தான் இந்தப்படத்தில் என் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ ராஜ ராஜன், தன் படத்தின் நாயகி நன்றாக தமிழ் பேசக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் என்கிற ஒரே நிபந்தனையுடன் நாயகியைத் தேடிக்கொண்டிருந்தார். எனக்கு தமிழ் நன்றாகப் பேசவரும் என்பதால் உடனே ஓ.கே ஆகி இந்த படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

விளம்பரப்படங்களில் நடித்தாலும் மாடலிங், ஃபேஷன் ஷோ போன்றவற்றில் உங்களுக்கு ஈர்ப்பு இல்லையாமே?

ஆமாம். ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக் இதிலெல்லாம் கலந்து கொண்டால் நமக்கு விளம்பரம் கிடைக்கும். ஆனால் முக பாவனைகளை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லை. அதோடு அந்த நிகழ்ச்சிகள் இரவில் நீண்டநேரம் நடக்கும். இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று தவிர்த்து வருகிறேன்.

சினிமாவில் உங்களை எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் பார்க்க முடியும்?

ஒரே மாதிரி நடித்தால் 2 படங்களில் காணாமல் போய்விடுவோம். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.

‘அருந்ததி’ என்றால் அனுஷ்காவும், ‘சந்திரமுகி’ என்றால் ஜோதிகாவும் நினைவுக்கு வந்துவிடுகிறார்களே. அதுமாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். பொம்மை மாதிரி வந்துபோகும் கதாபாத்திரங்கள் கண்டிப்பாக வேண்டாம். அப்படி 100 படங் களில் நடிப்பதைவிட சிறந்த கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்தில் நடித்தால் கூட போதும்.

அப்படியென்றால் கிளாமராக நடிக்கமாட்டேன் என்கிறீர்களா?

என் படங்கள் அனைத்துமே குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படியாக இருக்கவேண்டும் என்பது என் ஆசை. இங்கே இப்போது லட்சுமிமேனன் கிளாமருக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் நல்ல நல்ல கேரக்டரை தேர்வு செய்து நடிக்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறதே. அதேபோல் நானும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்.

SCROLL FOR NEXT