தமிழ் சினிமா

‘பிக் பாஸ் 3’: மீண்டும் தொகுப்பாளராகிறார் கமல்

செய்திப்பிரிவு

விஜய் டிவியில் 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதேசமயம், ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி ஆகியோர் மீது எதிர்மறையான எண்ணம் தோன்றவும் இந்த நிகழ்ச்சி காரணமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் 2’, கடந்த வருடம் (2018) ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. கடந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

பொதுவாக, இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாகும். அதன்படி பார்த்தால், கடந்த வருடன் ஜூன் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள், செப்டம்பர் 24-ம் தேதி திங்கட்கிழமையுடன் முடிந்துவிடும். ஆனால், வார நாட்களில் ஃபைனல் நடக்காது என்பதால், 6 நாட்களை நீட்டித்து செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் ஐஸ்வர்யாவு தத்தாவுக்குக் கிடைத்தது.

இந்நிலையில், மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது ‘பிக் பாஸ்’ டீம். இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு முறையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், வீட்டுக்குள் நடந்த விஷயங்கள் மட்டுமின்றி, அரசியல், சினிமா என நிகழ்ச்சிக்குக் கூடுதல் சுவாரசியம் சேர்த்ததால், இம்முறையும் அவரையேத் தேர்ந்தெடுத்துள்ளது ‘பிக் பாஸ்’ குழு என்கிறார்கள். விரைவில் ப்ரமோ வெளியிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) முதல் ‘பிக் பாஸ் 3’ ஒளிபரப்பு தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT