‘விக்கி டோனர்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு ‘தாராள ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம் ‘விக்கி டோனர்’. ஷூஜித் சர்கார் இயக்கிய இந்தப் படம்தான், ஆயுஷ்மான் குர்ரானா நடித்த முதல் படம். நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரித்த இந்தப் படம், 2012-ம் ஆண்டு ரிலீஸானது.
ஹீரோயினாக யாமி கெளதம் நடிக்க, அன்னு கபூர், கம்லேஷ் கில், பூஜா குப்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், விந்து தானம் மற்றும் குழந்தைப்பேறின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்தி மட்டுமின்றி பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழியிலும் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது. மேலும், 3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. ‘ஸ்டார்பக்’ என்ற கனடாப் படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான விஷாலின் ‘அயோக்யா’ உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்ட ஸ்கிரீன் ஸீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாகத் தயாரிப்பில் இறங்குகிறது. இந்தப் படத்தில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘தாராள ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் பாரதி இயக்கிவரும் இந்தப் படத்தில், ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார். முனிஷ்காந்த், பாண்டியராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.